ஆராதனை பாடல் வரிகள்


அகிலம் ஆள்பவா அன்பின் நாயகா அனைத்தும் ஆக்கும் அறிவே

ஆதாரமாய் ஆத்ம ஜோதியாய் ஆன அறிவின் நிறைவே

தடுமாறும் பொழுதில் தாங்கிடும் நேசமாய்

தாயாகி நின்றாயே ஒருகணமும் உனை மறவேன்

1. ஊரறியாமல் உலகறியாமல் நான் வலி சுமந்த நாட்களில்

நானறியாமலே என் நண்பனாகினாய் சுமைகள் தாங்கினாய் - 2

பூவாக என்னை மலரவும் வைத்தாய் புன்னகையும் தந்தாய்

நீங்காது எந்தன் நிழல்போல் நீயும்

நிதமும் அருகில் இருந்தாய் என் செல்வமே

2. நிலவில் கருமைபோல் நிறைவும் குறைகளும்

என் வாழ்வு காணும் காட்சிகள்

தேடுவேன் வந்து நீ என்னை ஆட்கொண்டு முழுமையாக்கிடு - 2

துயருறும் மானுடம் ஆறுதல் பெறவே அர்ப்பணிப்பேன் என்னை

ஆதாரமாகும் அருளால் என்னைக் காத்து நிதமும் நடத்து என் செல்வமே


அடைக்கலம் தருகின்ற நாயகனே

அருள்மழை பொழிகின்ற தூயவனே

அடைக்கலம் எனக்கு நீயல்லவோ

அன்புக்கு நீயொரு தாயல்லவோ - 2

1. தெய்வீக நீதியின் கதிரவனே

தீமைகள் போக்கும் காவலனே - 2

ஏழையின் கண்களை பாராயோ

என்னென்ன கவலைகள் தீராயோ

2. அருள் ஒளி உண்டு உன் விழியினிலே

ஆறுதல் உண்டு உன் மொழியினிலே - 2

பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ

பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ

3. அணையாத விளக்கு எரிவதனால்

அன்பரின் உள்ளம் தெரிவதனால் - 2

இறைவனே உனது துணை என்று

இதயத்தில் நினைத்தேன் நான் இன்று


அடைக்கலமான ஆண்டவரே

அனைத்திலிருந்து காப்பவரே

உமக்கே நான் சொந்தம் - 2

1. இரவும் பகலும் உன் நினைவே

ஒளிர்ந்திடும் வாழ்வில் உன் நிழலே - 2

நெருக்கடி வேளையில் இருகரம் விரித்து

அருள்மழை பொழிவாய் வெண்ணிலவே என் வெண்ணிலவே

2. பகையும் பாவமும் ஒழிந்திடவே

நீதியும் நேர்மையும் நிலைத்திடவே - 2

வார்த்தைகள் வளமாய் ஓங்கிடவே

அருகினில் தவழ்வாய் வெண்ணிலவே என் வெண்ணிலவே


அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் - 2

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து - 2

வெறும் தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம் - 2

2. செங்கடலை இரண்டாகப் பிரித்திட்டார் அதிசயம் - 2

புயல்காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் - 2

3. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2

ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2

4. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2

ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - 2


அருள் தாரும் இயேசுவே சுகம் பெறுவேன் இயேசுவே

ஒருவார்த்தை பேசுமே என் வாழ்வு நலமாகுமே

ஆராதனை ஆராதனை ஆராதனை செய்கின்றோம் - 2

2. தாவீதின் திருமகனே தயை கூர்ந்து இரங்குமய்யா

கடைக்கண்ணால் எமைப்பாருமே கருணைக்கடல் இயேசுவே ஆராதனை...

3. மெய் தொடுவாய் இயேசுவே நோய் களைவேன் இயேசுவே

ஆசீரளிப்பாய் இயேசுவே மீட்பு பெறுவேன் இயேசுவே ஆராதனை...

4. மார்போடு அணைத்துக் கொண்டு மன்னித்து வாழ்வு தரும்

பேரன்பே உன் பாதத்தில் என் முத்தம் பெற்றுக்கொள்ளும் ஆராதனை...


அருளே உன்னருகில் வாழவேண்டும்

அகிலம் அறநெறியில் வளர வேண்டும் - 2

நின் பாதம் சரணடைந்து நான் வேண்டும் வரங்களெல்லாம் - 2

வறுமை இல்லாத உலகம் ஒன்றும்

வெறுமை உணராத வாழ்க்கை ஒன்றும்

அழிவுகள் இல்லாத எதிர்காலமும்

ஆயுதப் போர் இல்லா புதுபூமியும் - இறைவா

கங்கா நதிபோல் அன்பின் வெள்ளம்

கரைபுரண்டோடிடும் காலமும் மலராதோ

கனவுகள் மெய்ப்படும் காட்சிகள் கனியாதோ

1. தூயமதி நின்று தீயநெறி நீக்கும் ஞானஒளியும் வேண்டும்

எனக்காக நான் ஆசை கொள்பவை எல்லோருக்கும் வேண்டும் - 2

கனிவா கண்மணியே கனவுகள் மெய்ப்படுமோ இறைவா...

2. உயிரில் கலந்துருகி உறவின் கவிதையென உயரும் எனது பாடல்

என்ன நேரினும் உன்னை மறவாது வாழும் இன்பம் வேண்டும் - 2

இருள்வந்து சூழ்ந்திடினும் உன் கரம் என்னை வழிநடத்தும் இறைவா...


அன்பின் தேவ நற்கருணையிலே

அழியாப் புகழோடு வாழ்பவரே

அன்புப் பாதையில் வழி நடந்தே

அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்

தற்பரன் நீரே எமை மீட்டீர்

பொற்புடன் அப்ப இரச குணத்தில்

எப்பொழுதும் வாழ் இறைவனானீர்

எத்தனை வழிகளில் உமதன்பை

எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்

கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்

நற்கருணை விசுவாசமதில்

நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்

இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்

யாவரும் வாழத் தயைபுரிவீர்


அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து

பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமஸ்காரம்

1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்

நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்

2. நித்திய பிதாவினண்டை பாக்கியமாய் நீர் வீற்றிருக்க

சுத்தமில்லா பூவுலகை சுதந்திரமாய் கொண்டதேனோ

3. விண்ணுலக தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே

மண்ணுலக வாசிகளுள் வந்ததென்ன வானரசே


அன்பே உயிரே ஆராதனை

அளித்தோம் உமக்கே ஆராதனை - 2

1. உலகம் முடியும் நாள் வரையில்

உமக்கே என்றும் ஆராதனை

தலைவா எங்கள் உள்ளங்களில்

தந்தோம் என்றும் ஆராதனை - 2

2. விண்ணில் மின்னும் தாரகைகள்

விடுக்கும் என்றும் ஆராதனை

கண்ணில் ஆடும் கண்மணிகள்

சொல்லும் என்றும் ஆராதனை - 2

3. அழைப்பை ஏற்று ஆலயத்தில்

தங்கிட வந்தாய் ஆராதனை

உழைப்பை ஏற்று உள்ள மெல்லாம்

உவந்தே செலுத்தும் ஆராதனை - 2


அன்பே இயேசுவே என்னுள்ளம் வாருமே - 2

அன்பே இயேசு தெய்வமே என் உள்ளம் வாருமே - 2

அருள்பார்வை ஒன்றே போதுமே எந்தன் வாழ்வு வளம் பெறுமே

1. மண்மீது பகை வளர்க்க வேர்கள் தான் விரும்புமோ

மனிதரை வெறுத்துவிட்டு உன் வழி நடப்பதோ - 2

உன்னிலே நானும் வாழ்ந்திட வேண்டும்

உறவின் ராகங்கள் இசைத்திட வேண்டும் - 2

என்றும் மண்ணில் உந்தன் அன்பில் நிலைத்திட வேண்டும்

எந்தன் உள்ளம் நீயே வந்து உறைந்திட வேண்டும்

2. வாதங்கள் பேதங்களால் வளர்ந்திடும் சுயநலம்

வன்முறை பேரிடரால் வாடிடும் மானிடம் - 2

அனைத்துயர் காக்கும் அருள்மழையே வா

அகத்தினில் அமைதியும் ஆற்றலும் நீ தா - 2

இருளினைப் போக்கும் ஒளியென வாழ்வேன்

இறைவனின் திருவுளம் நடந்திட உழைப்பேன்


ஆண்டவரே அன்பான தேவனே உமக்கே ஆராதனை - 2

ஆராதனை ஆராதனை எங்கள் இயேசு ராஜா உமக்கே - 2

1. கல்வாரி நாயகனே உமக்கே ஆராதனை

கண்மணி போல் காப்பவரே உமக்கே ஆராதனை

காலங்களைக் கடந்து வாழ்பவரே

கண்ணை மூடிக் கரம் குவித்து ஆராதனை ஆராதனை...

2. அடைக்கலம் தருபவரே உமக்கே ஆராதனை

அருள்மழை பொழிபவரே உமக்கே ஆராதனை

ஆயிரமாய் அற்புதம் செய்பவரே

சிரம் தாழ்த்தி தாள் பணிந்து ஆராதனை ஆராதனை...

3. இனிமை தரும் இனிய நேசரே உமக்கே ஆராதனை

எங்களின் இதய தெய்வமே உமக்கே ஆராதனை

உயிரின் உயிராய் இருப்பவரே

புத்தம் புது கீதங்களால் ஆராதனை ஆராதனை...


ஆண்டவரே என்னில் நீர் எழுந்திட தகுதி எனக்கில்லை

என்மீது இரங்கி ஒரு வார்த்தை பேசும்

நலம் பெறுவேன் நான் குணம் பெறுவேன் - 2

1. ஆண்டவரே உம்மைப் பிரிந்து எங்கு சென்றிடுவேன் - 2

உயிருள்ள வார்த்தைகள் உம்மில் உள்ளது

உமக்காக வாழுவேன் உமக்கே நான் சொந்தம் - 2

2. போகும் போதும் வரும் போதும் பாதுகாக்கின்றீர் - 2

எனக்கொன்றும் பயமில்லை துணையாய் இருக்கின்றீர்

நீதியின் கருத்தினால் என்னைத் தாங்கிடுவீர் - 2


ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன் - உன்

அடியவன் கேட்கின்றேன் - 2 பேசும் - 4

1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் - உன்

வார்த்தை வழிகாட்ட வேண்டும் - 2

தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது - 2 - என்

நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் - உன்

அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது

என் வாழ்வை வளமாக்க வேண்டும் பேசும்...

2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே - உன்

வார்த்தை விளக்காக வேண்டும் - 2

நாளும் நடக்கின்ற செயல்களிலே - 2 - உன்

கரம் ஒன்றே நான் காண வேண்டும் - என்

இதயத்தில் நீ பேச வேண்டும் - உன்

இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் பேசும்...


ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை

ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை

1. வானமும் பூமியும் படைத்தவா ஆராதனை

வார்த்தையால் எம்மை நிரப்பவா ஆராதனை - 2

வல்லமை எம்மில் சேர்ப்பவா ஆராதனை

வளமும் நலமும் தருபவா ஆராதனை

2. அமைதியில் என்றும் வாழ்பவா ஆராதனை

அருளை தினமும் பொழிபவா ஆராதனை - 2

ஆற்றலாய் எம்மில் இருப்பவா ஆராதனை

ஆனந்த துதியில் மகிழ்பவா ஆராதனை

3. தூய ஆவியைத் தந்தவா ஆராதனை

தூய நல் மனதில் திகழ்பவா ஆராதனை

துன்பத்தின் சூழலில் அணைப்பவா ஆராதனை

துணையாய் என்றும் இருப்பவா ஆராதனை


ஆராதனை ஆயிரம் துதிகள்

ஸ்தோத்திரம் நமஸ்காரம் நற்கருணை நாதர்க்கே

1. தாயைப் போல் தேற்றிட மண்ணகம் வந்தவா - 2

தந்தையைப் போல் இரங்கிட கரங்கள் விரித்தவா - 2

2. உலகத்தின் பாவங்களை போக்க வந்தவா - 2

சாபங்களை பாவங்களை சுமந்து தீர்த்தவா - 2


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் - 2

1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்

நல்லவரே உம்மை ஆராதிப்பேன் - 2

2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்

பணிந்து குனிந்து ஆராதிப்பேன் - 2

3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் - 2

4. காண்பவரை நான் ஆராதிப்பேன்

காப்பவரை நான் ஆராதிப்பேன் - 2

5. புத்தாடை அணிந்து ஆராதிப்பேன்

குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் - 2


ஆன்மா பாடும் ஆனந்த கீதமிது

அன்பே உன்னில் மூழங்கிடும் நேரமிது - 2

என் இறைவனே உன்னில் மகிழ்வேன்

என் எழிலரசே உன்னில் வாழ்வேன் - 2

1. தளர்கையில் சாய்ந்திட தோள்கொடுப்பாய் - என்

தனிமையில் நண்பனாய் துணை கொடுப்பாய் - 2

உனை நான் மறந்து வாழ்வதில்லை - 2 என்

உறவே உன்னைப் பிரிவதில்லை - 3

2. இதயத்தின் ஆழத்தில் உனை வைத்தேன் - என்

உயிரே உன்னில் எனை வைத்தேன் - 2

வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் - 2 என்

ஜீவனே உன்னில் வாழ்ந்திடுவேன் - 3


ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே

உன் படைப்பினில் தாராளம் உண்டு

என் வாழ்வினில் ஏராளம் உண்டு

ஆனந்த அனுபவமே இறைவா ஆனந்த அனுபவமே - 2

1. உறவினில் உள்ளம் மகிழ்கிறதே ஆனந்த அனுபவமே

என்னுள்ளம் உனக்காய் நெகிழ்கிறதே ஆனந்த அனுபவமே

என்னை மறந்து உந்தன் புகழ்பாடுதே ஆனந்த அனுபவமே

நெஞ்சம் உருகி இன்று உனதாகுதே ஆனந்த அனுபவமே

உன்னைப் பார்ப்பதும் உன்னுடன் இருப்பதும்

உன்னில் வாழ்வதும் உனக்காய் இறப்பதும் ஆனந்த அனுபவமே

2. உழைப்பினில் உன்னைக் காண்பதுவே ஆனந்த அனுபவமே

உண்மைக்கு சாட்சியம் பகர்வதுவே ஆனந்த அனுபவமே

ஏழையின் துன்பம் உணர்வதுவே ஆனந்த அனுபவமே

ஏன் என்று கேள்விகள் கேட்பதுவே ஆனந்த அனுபவமே

மனிதம் வளர்ப்பதும் மகிழ்வைக் கொடுப்பதும்

விழிநீர் துடைப்பதும் விலங்குகள் உடைப்பதும் ஆனந்த அனுபவமே


இதய மலரின் இதழ்கள் திறந்தேன் உதயமே வருக

உலகம் வாழ எனை நான் வழங்க இதயமே எழுக - 2

தேவனே இறைவனே இதயமே எழுக - 2

1. உன்னைப் பிரிந்து உலகில் என்னால் வாழ முடியுமா

அன்பை மறந்து அமைதி என்னால் காண முடியுமா - 2

இதய கோவிலில் பலி நீர் நடத்த

இனிய விருந்தில் எனை நான் மறக்க - 2

கொஞ்ச நேரம் எனது நெஞ்சில் தஞ்சமாகும் இயேசுவே - 4

2. எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றி காத்து இருக்கின்றேன்

மன்னன் உந்தன் கால்கள் ஓசை கேட்கத் துடிக்கின்றேன் - 2

மழலை மனமும் கவிதை புனைய

மலரும் நினைவுன் அருளில் நனைய - 2

நிலவைப் போலென் இதயவானில் பயணம் தொடர்வாய் இயேசுவே - 4


இதற்காகவா நான் உயிர் சுமந்து அலைந்தேன்

இதற்காகவே இதற்காகவே

இந்நாளுக்கா நான் நிதம் காத்து இருந்தேன்

இந்நாளுக்கே இந்நாளுக்கே

உடலாக நீ வருவாய் உணவாக உனைத் தருவாய்

நிலையான சொந்தம் நீ நிறைவாழ்வு தருவாய்

1. உலகாளும் செல்வங்கள் பல கோடி வந்தாலும்

உன்னோடு நான் காணும் சுகமாகுமோ

எனைத் தேற்றும் சொந்தங்கள் உறவாகி தந்தாலும்

எனக்காக உயிர் ஈந்த அன்பாகுமோ

மனதின் வாசலில் மலர்களைத் தூவி

மன்னவன் நீ வர மகிழ்வினை சுவைத்தேன் - 2

மாறாதவா என் மருந்தாக வா மனசெல்லாம் நீயாகி

எனை ஆள வா எனை ஆள வா நீ எனை ஆள வா

2. உள்ளத்தின் பூக்காடு நீயானாய் இந்நாளில்

உயிர்வாழும் பொழுதெல்லாம் மணமாகுவேன்

தனித்தீவாய் இருந்தாலும் சுகம் காண்பேன் எந்நாளும்

இனிக்கின்ற நினைவாக நீ ஆனதால்

வேரில் விழுந்த வெளிச்சம் நீ வெளிச்சம் காட்டும் முகவரி நீ - 2

வாழ்வானவா என் வழியானவா விழியோர இமையாகி

எனை மூட வா எனை மூட வா நீ எனை மூட வா


இயேசு இயேசு என்று அழைத்து

பேசு பேசு உன் கதையை - 2 - உந்தன்

குரலைக் கேட்டு உன்னை மீட்டு

வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்

சுடராய் அணையா ஒளியாய் - 2

வந்தார் மாபரன் இயேசு - உயிர்

தந்துனை மீட்டார் இயேசு கல்வாரி சிகரமதில் - 2

2. பாவிகள் நம்மை மீட்கவே உலகில்

ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார் - 2

போதனைகள் பல தந்து - நம்மை

வேதனையில் வெற்றி பெறச் செய்தார் - கல்வாரி...


லாலலாலலா ல லாலலாலலா லாலலாலலா லலாலா

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசதான்

நான் எப்போதும் ஒங்க கூட இருக்க ஆசதான் - 2

1. ஒங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசதான் - 2 நான்

ஒங்களோட சொந்தமாக மாற ஆசதான் - 2

2. ஒங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசதான் - 2 நான்

ஒங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசதான் - 2

3. ஒங்க அன்பில் நானும் தெனம் வாழ ஆசதான் - நான்

ஒங்களோட செல்லமாக மாற ஆசதான் - 2


இயேசுவே உந்தன் வார்த்தை எனக்கு வாழ்வு

இயேசுவே உந்தன் பார்வை எனக்கு விளக்கு

நீயே எந்தன் வாழ்வின் நிறைவாகும்

இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே

நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே

தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

1. தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே

பகைமையும் சுயநலங்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே - 2

நீதியும் நேர்மையும் பொங்கி நிறைந்திடுதே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

2. நன்மையில் இனி நிலை பெறும் என் சொல்லும் செயல்களுமே

நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலை வருமே - 2

மிஞ்சிடும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுமே

இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே


இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது - 2

1. கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது

உடலென்னும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது

ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது

உன்னைக் கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது

இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது - 2

2. உயிர்தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது

தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது

கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது

சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது

இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது - 2


இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்

உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் - 2

1. பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்

பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்

உதயம் தேடும் மலரைப் போலவே

உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்

நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை

நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா

வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே

2. தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்

பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்

அலைகள் ஓயாக் கடலைப் போலவே

அன்பே உனது அருளை வேண்டினேன்

தாயில்லாக் குழந்தை போலவே

தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே

முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே

காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே


இறையவனே உன்னை நான் காண வந்தேனே - 2

என்னவனே என்னை நான் உன்னிடம் தந்தேன் - 2

நீயே எனக்கு எல்லாம் நீயே எனக்கு எல்லாம் - 2

1. தனிமைக் குளிரும் நிலவாகும் நீ என்னோடு இருப்பதால்

தடுக்கும் கல்லும் தடமாகும் நீ எனக்காய் நடப்பதால் - 2

காரிருள் ஒளிரும் சுடராகும் நீ என் முகம் பார்ப்பதால்

கசக்கும் உறவும் கரும்பாகும் நீ என் கரம் பிடிப்பதால்

2. வீசும் புயலும் பூவாகும் நீ என் மனம் நிறைவதால்

சுமையும் இனிய சுகமாகும் நீ எனக்காய் சுமப்பதால் - 2

பாவ வாழ்வும் பணியாகும் நீ என் கறை துடைப்பதால்

எல்லாம் இன்றே இனிதாகும் நீயும் நானும் இணைவதால்


இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்

தாவி மேவி வருகின்றேன்

என் நிலை நான் சொல்கின்றேன் உன் குழந்தை நானல்லவா

என்னை நோக்கி ஓடிவந்து என்னைக் காப்பாயோ - 2

1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா

அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா - 2

ஒரு குறையும் இன்றிக் காத்தாய்

நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்

உன்னை ஒதுக்கியே வாழ்ந்த நானும் - இனி

என்ன கைம்மாறு செய்வேன் - 2

2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யா

மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா - 2

உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து

ஒருநாளும் பிரியாமல் வளர்ந்து

உந்தன் மடியிலே தவழ்ந்து நானும் - இனி

அப்பா தந்தாய் என்று அழைப்பேன் - 2


இறைவா என்னோடு பேசிட வா - என்

இதயம் மகிழ்ந்திட வா - 2

உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன் - 2

உனைப்பாடி மகிழ்ந்திருப்பேன்

1. கரங்களில் என்னைப் பொறித்தாய்

கண்ணின் மணியாய் காத்தாய்

மகனாய் மகளாய் ஏற்றாய்

மனதினில் அமைதியைத் தந்தாய்

என்னில் வந்த சொந்தமாய் நின்றாய்

உன்னில் என்னை இணைத்திட வந்தாய்

வருவாய் வருவாய் வருவாய் வரம் தருவாய்

2. விழியினில் நிலவாய் வந்தாய்

மார்பினில் சுடராய் நின்றாய்

உறவாய் எனை நீ அணைத்தாய்

உயிராய் எனை நீ இணைத்தாய்

விண்ணில் என்னை இணைத்திட வந்தாய்

மண்ணில் பல விந்தைகளைப் புரிந்தாய் வருவாய்...


உயிரின் ஒளியே உறவொன்று தருவாய்

வாழ்வின் வழியே உளம் நின்று பொழிவாய்

உந்தன் திருவுளம் என்னிலே உயிர்த்தெழும்

உனதன்பில் வளர்ந்திடும் நின்பதம் உயர்ந்திடும் - 2

தலைவா உந்தன் திருமுன் சிலிர்த்து நின்றிடும் மனமும்

உந்தன் வழியினில் மலரும் மகிழ்ந்து தொடர்ந்திடும் பயணம்

தலைவா உந்தன் திருமுன் திருமுன்

சிலிர்த்து நின்றிடும் மனமும் மனமும்

உந்தன் வழியினில் மலரும் மலரும்

மகிழ்ந்து தொடர்ந்திடும் பயணம் பயணம்

உணர்வுகள் நிலைபெறும் உறவுகள் உரம்பெறும்

உந்தன் மலரடி சரணம் சரணம்

1. உன்னெழில் தரிசனம் என்னகம் மலர்ந்திடும் பரம்பொருளே

ஆதவன் தழுவிடும் குளிர்கொன்றை மலராய்

வாடிடும் இதயத்தில் வசந்தமாய் வந்தாய் வளர்பிறையே

மேற்றிசை மெல்லிய இளந்தென்றல் காற்றாய்

ஆத்துமம் உறையும் ஈகையின் முதல்வா - 2

இதம் நிதம் வரைந்தாய் இசையாகி நிறைந்தாய்

2. தாகங்கள் தவிப்புகள் உலர்த்திடும் உன்னருள் வானமுதே

சூரியன் சுகித்திடும் வெண்பனித்துளியாய்

உன் பணிபுரிவதில் என் மனம் நிறைந்திடும் தேன்சுனையே

புவியினில் புரிந்திடும் வான்மழை முகிலாய்

இயற்கையில் இயங்கிடும் ஈசனே இறைவா - 2

இறைவிதை பொலிந்தாய் திருச்சபை மலர்ந்தாய்


உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்

உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்

உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும் - 2

1. ஆறாதத் துயர் தீர்க்கும் அருமருந்தே

அழியாத வானகத் திருவிருந்தே - 2

வழியாக வா என் வாழ்வினிலே உயிராக வா என் உடலினிலே

ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில்

உள்ளம் மகிழ்ந்திடுமே

ஒரு பொழுதேனும்உன்னை மறந்தால்

உயிரும் பிரிந்திடுமே

2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே

நிறைவாழ்வை எமக்குத் தருபவனே - 2

ஒளியாக வா என் பாதையிலே வளமாக வா என் வாழ்வினிலே

நீதியின் இறைவா நேர்மையின் தலைவா உள்ளம் வாருமே

வான்மழை போல வானக வாழ்வின் நிறைவைத் தாருமே


உள்ளக் கமலம் உனதாய் மாற என்னிடம் வாராய்

உவப்புடன் உமதருளை நாளும் தாராய் - 2

1. சுமை சுமந்து சோர்ந்திருப்போர் வாரீர் என்றீரே

சுமை இனிது நுகம் எளிது என்றும் சொன்னீரே - 2

கவலையினால் வாடுகையில் எங்கே செல்வோம் யாம் - 2

இளைப்பாற்றி கொடுப்பவரும் நீரே அன்றோ

2. உலகினுக்கு ஒளியாக வந்தாய் நீயே

வாழ்வினுக்கு வழிநானே என்றாய் நீயே - 2

உள்ளத்தினது இருளினிலே வாடும் நாங்கள் - 2

உமதருளில் நிலைத்திருக்கும் மாண்பை தாராய்


உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்

உலகாளும் தேவன் நெறிவாழும் இதயம் தெய்வம் தரிசனம்

மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்

நிறையோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

2. அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம்

மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம்

ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில் தெய்வம் தரிசனம்

தணலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

3. மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம்

சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம்

உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்

இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்

தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2


உன் கரம் பற்றி வழி நடப்பேன் நீ காட்டும் பாதையிலே

தெரியாத பாதை முடியாத போதும்

பலம் தரும் உன் துணையே

1. நிலையான வாழ்வு நிறைவான மகிழ்வு

தொலைதூர வழி தாண்டியே

பல காலமாகும் தலைவா உன் பாதம்

மகிழ்வோடு சரணாகவே - 2

தொலை தூர கனவில் மனம் தேற்றும் நிறைவு

ஒரு போதும் நான் வேண்டிலேன்

அடியடியாய் படிப்படியாய் தொடர்ந்தாலே பேரின்பமே - 2

2. இருள் சூழ்ந்த போதும் இடர் வந்த போதும்

சிறிதேனும் பயமில்லையே

தடுமாறினாலும் தடம் மாறினாலும்

பலவீனம் எனக்கில்லையே - 2

என் காதில் கேட்கும் உன் பாத ஓசை என்னோடு நடமாடுமே

களைப்பினிலும் சலிப்பினிலும் கலங்காது முன்னேறுவேன் - 2


உன் பாதம் சரணாகின்றேன் உனில் வாழும் நினைவாகின்றேன்

உனைப் பிரியா உறவாகின்றேன்

உனைச் சேரும் உயிராகின்றேன்

1. இமையாக எனை நீ காத்தாய் இருள் போகும் வாழ்வு மகிழ்வாகும் - 2

இறவாதது உன் இரக்கந்தான்

நிஜமானது உன் பேரன்புதான் இயேசய்யா இயேசய்யா

கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு

களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம்

2. கடல் தேடும் நதி நானாக நிலம் தேடும் மழை நீயாக - 2

உடன் வாழ்வது உன் அன்புதான்

உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசய்யா இயேசய்யா

கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில்

தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட


உன்னைப் பாடாத நாளெல்லாம் வீணே

உன்னைத் தேடாத வாழ்வெல்லாம் வீணே

கைகளிலே பேரெழுதி நாளெல்லாம் வாசித்தாய்

கண்களிலே ஊரெழுதி வாழ்வெல்லாம் நேசித்தாய்

போதாது வார்த்தைகள் உனது அன்பைப் பாடவே

போதாது வாழ்நாட்களுன் புகழ் பாடவே

1. பாவத்தில் வாழ்ந்தாலும் பாசத்தைப் பொழிகின்றாய்

ஆபத்தில் வீழ்ந்தாலும் அன்புக்குள் நனைக்கின்றாய் - 2

தாயுன்னை நான் பிரிந்து ஓடியோடி ஒளிகின்றேன்

ஆடென்னைத் தோள் சுமக்கத் தேடித் தேடி அலைகின்றாய்

முள்ளில் நான் மலர்ந்தாலும் உன் பீடம் ரோஜாப்பூ

சேற்றில் நான் வளர்ந்தாலும் உன் பாதம் தாமரைப்பூ

வாடாப்பூ நீ என்பேன் என் இயேசுவே - உன்னைத்

தேடாப்பூ நான் என்பேன் என் இயேசுவே

2. பாதத்தில் அமர்கின்றேன் பரிவன்பை உணர்கின்றேன்

நேசத்தில் என் கதையை மௌனத்தில் மொழிகின்றேன் - 2

உறவெல்லாம் போலிகள் என்று ஒவ்வொரு நொடியும் யோசித்தேன்

உலகெல்லாம் வேலிகள் என்று உன்னிடம் வந்து யாசித்தேன்

கதை கேட்டு அருள்கின்றாய் விதை போட்ட வித்தகனே

கரம் நீட்டி அணைக்கின்றாய் உயிர் தந்த உத்தமனே

நீயின்றி நானில்லை என் இயேசுவே - உன்

நினைவின்றி வாழ்வில்லை என் இயேசுவே


உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என்

உள்ளத்தில் உறைந்திட வா

உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் - என்

உயிரினில் கலந்திட வா

வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே - 2

1. உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா

வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா - 2

நீதியும் நேர்மையும் மறைந்தாலும்

உரிமையை மனிதம் இழந்தாலும் - 2

உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

2. பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா

அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா - 2

வாள்களும் போர்களும் அழித்தாலும்

வாழ்வினை வாழ்வே எரித்தாலும் - 2

வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா


உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்

உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்

உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்

இறைவா இறைவா அமைதி காண்கிறேன்

நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

1. என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்

எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் - 2

என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் - 2

இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்

எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

2. இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே

இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே

உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் - 2

உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்

என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்


உன்னோடு உறவாடும் நேரம் என் பாடல் அரங்கேற்றம் ஆகும்

எந்நாளும் என் வாழ்வில் நீ செய்த நன்மை

நாள்தோறும் நான் பாடும் கீதம்

1. பல கோடிப் பாடல்கள் நான் பாடவேண்டும்

மனவீணை உனை வாழ்த்த வேண்டும்

ஒளிவீசும் தீபங்கள் நீயாக வேண்டும்

இமையோரம் நின்றாள வேண்டும்

இதழோர ராகம் உன் ஜீவ கானம்

அருள் தேடும் நெஞ்சம் உன் பாத தஞ்சம்

மனமே மனமே இறையோடு பேசு

2. கல்வாரி வாக்குகள் வாழ்வாக வேண்டும்

வாழ்வே உன் கவியாக வேண்டும்

அலைமோதும் எண்ணங்கள் நீயாக வேண்டும்

வினை தீர்க்கும் மருந்தாக வேண்டும்

மணியோசை நாதம் நான் கேட்ட காலம்

வான் தந்த வேதம் தேனாகும் கோலம்

உயிரே உயிரே இறையோடு பேசு


எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா

என்றென்றும் பாடிப் பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா - 2

கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2

இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேளை உன்னைக் கூவி அழைப்பேன்

இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா

தாய்மடி சேரும் சேய்போல ஓடிவருவேன் - 2

எனையன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்

எனையென்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான் - 2

நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்

நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்

நான் தேடும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்

2. என் நிலை பாதை மாறும் வேளை வாசல் தேடிவருவேன்

இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா

தாகம் கொண்ட மான் போல ஓடிவருவேன் - 2

என் வழித்துணையாய் ஆன தெய்வம் நீதான்

எனையென்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான் - 2

நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்

நான் பேசும் மொழியில் அகர னகரம் நீதான்

நான் வேண்டும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்


எந்தன் ஜெபவேளை உமைத் தேடிவந்தேன் தேவா பதில் தாருமே - 2

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடிவந்தேன் - 2

1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே

தடை யாவும் அகற்றிடுமே

தயைவேண்டி உம் பாதம் வந்தேன் - 2

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார்த்தையைக்

கேட்டிடக் காத்திருப்பேனே - 2


என் ஆன்மாவின் ஆனந்தமே

உன் சேயாய் என் தாயாய் நான் வாழுவேன்

ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே

உன் சேயாய் நானும் என் தாயாய் நீயும்

வாழ்ந்தாலே தெய்வீகமே - 2

1. நெஞ்சினிலே நிதம் வைத்தீர் சிந்தையிலே உருப்பதித்தீர்

உன் அன்பில் எனை மறந்தேனே - 2

ஆறாத காயங்களில் தீராத துன்பங்களில்

உம் வார்த்தையால் குணம் தந்தீரே

என்னுயிர் நண்பன் விழியினிலே - 2

கண்மணி நான் கலங்கிடுவேனா(னோ) - 2

2. உன் தோளில் எனைச் சுமந்து உன் அன்பில் நிதம் நனைத்து

கலங்காதே என மொழிந்தீரே ஆ... - 2

நலனின்றிப் போய்விடினும் நம்பிக்கை சாய்ந்திடினும்

என்னருகில் நீர் இருப்பீரே

என்னுயிர் நண்பன் விழியினிலே - 2

எதுவரினும் துணிந்திருப்பேனே - 2


என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா

உன் உறவை எண்ணியே

உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா - 2

1. அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒருநாள் அழியலாம்

அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் - 2

ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - 2

என் இனிய அன்பே எழுந்து வா

2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு

தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு - 2

ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ - 2

என் இனிய நண்பா எழுந்து வா

3. பொய்மை மலிந்து மெய்மை மெலியும் நிலையைக் காண்கிறேன்

தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகிறேன் - 2

எந்தன் தெய்வமே உன் அன்பால் ஆள வா - 2

என் உள்ளம் நிறைந்து வாழ வா


என் இயேசு என்னில் வா என்னோடு பேச வா - 2

1. உறவின்றி வாழ்கின்றேன் உன் துணை ஒன்றை நாடினேன் - 2

புயலாகத் துயர் எழுகையிலே - 2

என் வாழ்வில் சுகம் காணும் தென்றலாய் தினந்தோறும் வா

2. சுகமின்றி வாழ்கிறேன் உன் அகம் ஒன்றை நாடினேன் - 2

இதழாக மனம் விரிகையிலே - 2

என் வாழ்வில் சுவையூறும் தேனாக தினந்தோறும் வா


என் இயேசுவே என் ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்

என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் - 2

1. நீரே திராட்சைக் கொடி நாங்கள் அதன் கிளைகள்

உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது - 2

2. ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்

என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான் - 2


என் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்

அன்பொன்றே அது என்றும் நாடும் - 2

இன்பங்கள் நதியான வெள்ளம்

இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்

ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2

1. உன்னோடு ஒன்றாகும் நேரம்

உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2

நான் என்பதெல்லாமே மாறும்

பிறர் சேவை உனதாக ஆகும்

எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் - 2

அன்போன்றே ஆதாரமாகும்

விண் இன்று மண் மீது தோன்றும்

2. பிறர் காணும் இன்பங்கள் எங்கள்

இதயத்தை இசை மீட்டிச் செல்லும் - 2

வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்

உறவென்னில் உயிர் வாழத்தானே

என் சாயல் அன்று உன் சாயல் இன்று - 2

உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று

என்றாகும் நன்னாளும் தோன்றும்


என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய்

நம் ஆண்டவர் நம்மில் வரும்போது - 2

1. பாவி என்னுள்ளம் உன்னில்லமாக்குவாய்

பாவத்தினால் வந்த சாபம் போக்குவாய்

தாவி வருவாய் என் தாகம் நீக்குவாய்

காவலாய் என்னில் என்றும் நீ வாழுவாய்

வாழ்வரசே வந்தென்னை ஆளுவாய்

2. வானிலிருந்து என் ஆன்ம அமுதமாய்

வாழ்வும் என் வாழ்வினிலே ஒளியுமாய்

கானிலே அன்று என் இன்ப மன்னாவாய்

தானமாய் எல்லாம் எமக்கே தந்தவா

எல்லை உண்டோ உந்தனின் அன்பிற்கே

3. எண்ணங்கள் யாவும் நீயாக வேண்டுமே

எண்ணில்லா நன்மை எனக்கு செய்ததால்

விண்ணில் வாழும் என் ராஜ ராஜனே

பண்ணாக உன் நாமம் போற்றிப் பாடுவேன்

நன்றி சொல்வேன் என் நேச இயேசுவே


என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே

இறைவா என் உள்ளம் வருவாய்

என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே

தலைவா நீ உன்னைத் தருவாய்

என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே

இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

1. என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்

நீதானே நீதானே இறைவா

என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்

தருவாயே தருவாயே தலைவா

வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே

வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2

வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2. எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை

அறிவேனே அறிவேனே இறைவா

உனைப் போல நானும் பிறரன்பில் வளர

அருள்வாயே அருள்வாயே தலைவா

மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே

ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2

நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்


என் தெய்வம் என்னில் வா என்னோடு உறவாட வா

என்னில்லம் உன்னில்லம் ஆக்கிட வா என்னை நீ ஆள வா

1. அகத்தின் இருளை அகற்றும் அருளைப்

பொழிவாய் நின் வரவால் - 2

நெஞ்சார உன்னை எந்நாளும் போற்றும் - 2

நல் உள்ளம் அருள வா

என் தெய்வமே மகிமை மன்னவா - 2

2. வேந்தனும் ஆயனும் ஆன என் தேவனே

மாந்தரைக் காத்திட வா - 2

உம்மோடு என்றும் ஒன்றிக்கும் வரையும் - 2

என் உள்ளம் எழுந்து வா - என்...


என் தேவனே உன் அடியேன் யான்

அமைதியில்லா இவ்வுலகில் - உன்

அமைதியின் தூய கருவியாக

என்றும் வாழ்ந்திட வரம் அருள்வாய்

1. எங்கே பகைமை நிறைந்துள்ளதோ

அங்கே அன்பை விதைத்திடவும்

எங்கே கயமை நிறைந்துள்ளதோ

அங்கே மன்னிப்பை அளித்திடவும்

எங்கே அய்யம் நிறைந்துள்ளதோ

அங்கே நம்பிக்கை ஊட்டிடவும்

இறைவா அருள்வாய் இறைவா அருள்வாய்

2. எங்கே சோகம் நிறைந்துள்ளதோ

அங்கே புத்துயிர் அளித்திடவும்

எங்கே இடரும் இருள் உள்ளதோ

அங்கே ஒளியை வழங்கிடவும்

எங்கே கவலை மிகுந்துள்ளதோ

அங்கே மகிழ்ச்சி அளித்திடவும்

இறைவா அருள்வாய் இறைவா அருள்வாய்


என் மனம் பாடும் பாடலிது தேவா

என்னுள்ளே தீரா தாகமிது நாதா

நீ தரும் நேசம் நினைவினில் வாழும் - 2

நிலையில்லா பனி போல் என் சோகம் மாறும்

1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்

நிம்மதி நீ கொணர்ந்தாய் - 2

கனவெல்லாம் கானல் நீரோ - நான்

கண்ணீரில் வாழும் மீனோ - 2

உன் திருவடியே என் மனம் சரணம்

உளமதிலே நீ உன்னொளி தரணும்

2. வழி மீது வழி வைத்து ஒளி தேடினேன்

இருளினில் நான் விழுந்தேன் - 2

நான் என்ன வாடும் பூவோ - இல்லை

உன் பாதம் சூடும் பூவோ - 2

என் மனம் நீ வா நிம்மதியைத் தா

என் முகம் தனிலே புன்னகையைத் தா


என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே

எல்லாமும் நீயாக வேண்டும் - எந்தன்

எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது

தாயாக நீ மாறவேண்டும்

அன்புத் தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது

பாதங்கள் நீயாக வேண்டும் - எந்தன் - 2

பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது

ஓடங்கள் நீயாக வேண்டும் - வரும் - 2

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும் போது

பாலங்கள் நீயாக வேண்டும் - இணைப் - 2

தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்

பாடங்கள் நீயாக வேண்டும் - மறைப் - 2

3. காலங்கள் தோறும் என் நெஞ்ச வீட்டில்

தீபங்கள் நீயாக வேண்டும் - சுடர் - 2

தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது

மேகங்கள் நீயாக வேண்டும் - மழை - 2


என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா

எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா - 2

1. சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன

எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன

கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே

காலை நேரத் தென்றலாக கனிவோடு என்னில் வாருமே

2. மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக

எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே

நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை

எனக்குத் துணை நீயாய் இருக்க என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்


என்னில் நீ வருவதற்காய் உனைத் தேடி வருகின்றேன்

உன் சாயல் நானாகவே என் வாசல் வா தெய்வமே - 2

உனையன்றி வழியில்லை உனையன்றி ஒளியில்லை

உன் சாயல் நானாகவே என் வாசல் வா தெய்வமே

1. இதயவாசல் திறக்கின்றேன் இரு கரத்தைக் குவிக்கின்றேன் - 2

உயிரின் மூலமே உறவின் பாலமே

அன்பின் முழுமையே அனைத்தின் முதன்மையே - 2

ஆதவன் பூமியில் வெளிச்சமாவது போல்

அன்பனே என்னில் நீ வெளிச்சமாகிட

2. உன்னில் வாழத் துடிக்கின்றேன் உன் அன்பை நினைக்கின்றேன் - 2

என்னின் தொடக்கமே அன்பின் அர்த்தமே

ஆதி அந்தமே எனது சொந்தமே - 2

அழுதிடும் மழலைக்கும் அணைக்கும் தாயைப் போலுன்

சிறகினில் நான் தங்கி இளைப்பாறிட


என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் - 2

1. கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது - 2

கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2

2. துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2

3. உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு - 2

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் - 2


என்னை சுமப்பதனால் இறைவா - உன்

சிறகுகள் உதிர்வதில்லை

அள்ளி அணைப்பதனால் இறைவா - உன்

அன்பு குறைவதில்லை - 2

ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்

வானம் கிழிவதில்லை - 2

ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்

நதிகள் அழுவதில்லை - 2

1. கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்

குழந்தை சுமையில்லை

கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு

இமைகள் சுமையில்லை - 2

மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்

பனித்துளி சுமையில்லை - 2

வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்

மழைத்துளி சுமையில்லை - 2

2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு

முட்கள் சுமையில்லை

இகழும் மனிதரில் இரங்கும் மனதிற்கு

சிலுவைகள் சுமையில்லை - 2

உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்

நானொரு சுமையில்லை - 2

உயிரை ஈயுமுன் சிறகின் நிழலிலென்

இதயம் சுமையில்லை - 2


என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன் - 2

காற்றும் நீயே கடலும் நீயே கருணை நீயே கனிவும் நீயே

அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை

எந்தன் அன்பு காணிக்கை எந்தன் நன்றி காணிக்கை

1. உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்

உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும் - 2

கனவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை - 2

வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன் - 2

2. நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்

நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும் - 2

நினைவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை - 2

வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன் - 2


என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

ஆசயாய் இருக்குதய்யா - 2

1. ஒன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் - 2

எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் - 2

2. நான் திரும்புற தெசயெல்லாம் ஒன் உருவம் தெரிய வேணும் - 2

திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் - 2

3. ஒன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் - 2

கலங்குற என் கண்ண ஒன் கரமே தொடைக்க வேணும் - 2


என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்

என் தெய்வமே - 2 நீயின்றி நானில்லையே

உன் நினைவின்றி வாழ்வில்லையே

1. இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ

உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ

தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்

தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

2. உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ

மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ

என் பாதையில் முன் போக வா

கண் போலவே எனைக் காக்க வா

ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே


என்னோடு நீ பேசவா என் நெஞ்ச நாயகனே

புதிய பூமி புலரவே தலைவனே வழியாய் வா

1. இதயம் திறந்து இமைகள் மூடி

உனக்காய் தானே காத்திருந்தேன் - 2

அமுதம் பருகும் ஆசை கொண்டு

வார்த்தைக்காகத் தவமிருந்தேன்

நம்பிக்கை ஜோதியே எழுந்து வா

என் ஆத்ம தாகம் போக்க வா

மனிதன் வாழ மன்னா பொழிந்த மன்னவனே விரைந்து வா

வா வா என்னில் வா என்னுயிராய் நீயாக வா

2. மழையின் மேகம் நல்லோர் தீயோர்

வேற்றுமையோடு பொழிவதில்லை - 2

உந்தன் அன்பை நானும் காண

சிலுவைத் தியாகம் செய்தவரே

இருளில் வாழ்ந்திடும் மாந்தர்கள்

ஒளியைக் காண எழுந்து வா மனிதன்...


ஒப்பற்ற என் செல்வமே ஓ எந்தன் இயேசு நாதா

உம்மை நான் அறிந்து உறவாட

உள்ளதெல்லாம் இழந்தேன் நான் - 2

1. உம்மை நான் ஆதாயமாக்கவும் உம்மோடு ஒன்றாகவும்

எல்லாமே குப்பை என - 2 எந்நாளும் கருதுவேன்

2. என் விருப்பம் எல்லாமே இயேசுவே நீர் தானன்றோ

உம் திரு ஆவி பெற - 2 உன் பாடுகள் ஏற்பேன்

3. கடந்ததை மறந்தேன் கண் முன்னால் என் இயேசுதான் - 2

தொடர்ந்து ஓடுவேன் - 2 தொல்லைகள் என்ன செய்யும்


ஒரு கணம் உனது திருவடி அமர்ந்து

இரு வழி மூடினேன் இறைவா

ஒருமுறை உனது திருமுக தரிசனம்

உள்மனம் தேடினேன் இறைவா

நிலவினை எடுத்து என் மனவானில்

இருளினை துடைத்திடு இறைவா

அருள் மழை பொழிந்து அகமான அழுக்கை

கழுவிட அமைதியே இறைவா

இறைவா இறைவா இறைவா இறைவா - 2

1. உதயம் விதையே பூவாகும் - அன்பில்

சிதையும் மனிதமே உயிர்ப்பாகும்

தோழமை என்பது கிழக்காகும் - அதில்

தொழுகைகள் ஒளியதன் தொகுப்பாகும்

நானே எனக்கொரு தவமாகும் - தினம்

வீழ்வதும் எழுவதும் இயல்பாகும்

நன்மைகள் செய்வதில் நதியாக - நான்

அன்புக்காய் எரிவதில் திரியாக

இதுவே இனி என் ஜெபமாகும் - உன்

திருவுளம் கனிந்தால் சுகமாகும் - 2

2. இடர்களில் விழுந்த இருவிழிகள் - தினம்

பெருநதி ஆகும் ஒருவேளை

தியாகத்தில் உதிரும் குருதிகள் யாவும்

விருதுகள் ஆகும் ஒருநாளில்

கண்களை மூடிடும் வேளையிலே - நான்

களிப்பது தேவனின் சோலையிலே

காலடி அமர்ந்திடும் ஒருகணமே - நான்

தாய்மடி அமர்ந்திடும் புதுசுகமே

பூவாய் உதிர்ந்திடும் நிலவாழ்வு - உன்

பூவடி விழுந்தால் நிறைவாழ்வு - 2


ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே

உம்மை நான் பிரிந்து சென்றாலும்

என்னோடு தங்கும் ஆண்டவரே - 2

என்னோடு தங்கும் - 3 ஆண்டவரே - 2

1. நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை

எனை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் - 2

பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது - 2

வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலைப் புதுப்பித்திட

2. என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது

உமது அருளால் துன்பங்கள் மறைகின்றது - 2

உம் தெய்வீக ஆறுதலால் என்னை பலப்படுத்தும் - 2

என் முழு உள்ளத்தினால் உம்மையே நான் தினம் நேசித்திட


ஒருநாளும் அழியாத உறவென்னிலே

உருவாகும் அருளேசு வரவென்னிலே - 2

பிரிவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில்

எனையாளும் அவனன்பு இனி நாளுமே

1. நட்பென்னும் வானங்கள் இருள்மூடும் போதிலே

உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே - 2

உன் அருளன்பு எனைத் தாங்குமே

அன்பென்னும் தீபங்கள் அணைகின்ற நேரங்கள்

ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து

ஒருநாளும் அழியாத உறவொன்று தா

2. இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே

இரவென்ன பகலென்னவோ இதயத்துள் நீ பேசவே - 2

இனி எந்நாளும் பயமில்லையே

முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே

ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன்

உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா


ஒருபோதும் உனைப் பிரியா

நிலையான உறவொன்று வேண்டும்

என் உடல் கூட எரிந்தாலும்

உன் நாமம் நான் சொல்ல வேண்டும்

நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே - 2

நீங்காத நிழலாக வா இறைவா

1. உன் கையில் என்னை நீ பொறித்தாய்

பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் - 2

ஏன் என்னை நீ தெரிந்தாய்

என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்

உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்

தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்

உன்னோடு நான் வாழுவேன்

2. நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்

நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் - 2

என்னுள்ளே வாழும் தெய்வம்

என்னை நீ ஆளும் தெய்வம்

என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்

என் பாதை முன்னே நீதானே சென்றாய்

உன்னோடு நான் வாழுவேன்


ஓ தேவ சற்பிரசாதமே ஓ தயையின் ஊற்றே

மா தேவே எம்மில் என்றும் நீர் வாசஞ் செய்யலானீர்

ஓ இயேசு கிறிஸ்துவே நமோ ஓ ஸ்நேக தேவனே

நீசர்களாம் எம்மேல் வைத்த நேசம் என் சொல்வோம் யாம் - 2

2. விண்ணோர் விருந்தே நீரெங்கள் வெம்பவம் நோக்காமல்

மண்மீதெங்ஙான்றும் அன்பினால் வாசஞ் செய்யலானீர் ஓ...

1. தற்பரனாம் உம்மைப் பெற தைரியம் யாம் கொள்ள

அப்பத்தினில் மறைந்தெம்மை அன்போடழைக்கின்றீர் ஓ...


கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா

கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா

கருணை உன் வடிவல்லவா

வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்

கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்

எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

1. வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்

மனதீபம் நீ என்று அறியாமலே

அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்

அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2

தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்

உணராத நிலை மாற்றுவாயோ

உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்

ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்

மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

2. செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்

புவிமீது இசைஞானம் இழிவாகுமே

சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்

புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2

உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை

உண்டாக்கி அருள் வீசுவாயோ

தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்

இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்

நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்


கவிதை பாடும் நேரம் உன்னைப் புகழ்ந்து பாடும் இதயம்

வானம்பாடி போலே - உன்னை

பாடிப் பாடி மகிழ்வேன் நான்

1. உந்தன் கண்ணின் ஒளியே எந்தன் இதய வீணை பாடும் - 2

மலரின் மணமும் போலே - எந்தன்

ஜீவன் பாடும் ராகம் இதுவே

2. அன்பும் பண்பும் நீயே நல் இன்ப இறையும் நீயே - 2

அருளின் வடிவம் நீயே - உனை

நாளும் பாட வரங்கள் தா


கலங்காதே கலங்காதே நான் உன் கடவுள்

அஞ்சாதே அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கின்றேன்

நீ என் அடியவனே நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன் - 2

1. காற்றும் புயலும் குன்றும் நதியும் ஓர் நாள் மறைந்தாலும்

தேற்றும் எந்தன் வார்த்தை உன்னில்

இனி என்றும் மறையாதது - 2

காக்கும் தெய்வம் கரத்தில் உன் ஆத்மா ஒருநாளும் அழியாதது

2. ஏழ்மை வறுமை துன்பம் துயரம் தினம் உன்னை வதைத்தாலும்

கேட்கும் வரத்தை வாரி வழங்கும் வள்ளல் நாமன்றோ - 2

காக்கும் தெய்வம் கரத்தில் உன் ஆத்மா ஒருநாளும் அழியாதது


காக்கின்ற தேவன் உன்னோடுதான்

கலங்காதே திகையாதே என் மனமே - நீ - 2

1. துன்பத்தில் துணையாக உன்னோடுதான் - உன்

துயரினில் ஆறுதலாய் உன்னோடுதான் - 2

விழி காக்கும் இமையாக உன்னோடுதான் - 2 - நல்

வழிகாட்டும் ஒளியாக உன்னோடுதான் - 2

2. சோர்வினில் திடம் தர உன்னோடுதான் - உன்

நோயினில் சுகம் தர உன்னோடுதான் - 2

சோதனை வேளையில் உன்னோடுதான் - 2 - உன்

வேதனை தாங்கிட உன்னோடுதான - 2


சிறகை இழந்த பறவை பாடும் பாடல் கேட்கிறதா - உன்

உறவைத் தேடி உருகும் விழியின் தேடல் புரிகிறதா - 2

இறைவனே என் இறைவனே என் இதயக் கோயில் எழுந்து வா

வாசல் திறந்தேன் வாசல் திறந்தேன் உதயதீபம் ஏற்ற வா

1. உன்னைப் பிரிந்து வாடும் நாட்கள் யுகமாய் மாறிவிடும் - நான்

உந்தன் நினைவில் வாழும் நிமிடம் சுகமாய் ஆகிவிடும்

கண்ணை மூடி உன்னை நினைத்தால் கவலை மாறிவிடும் - 2

உன் கரங்கள் தழுவி நடக்கும் போது களைப்பு ஆறிவிடும்

கண்ணின் மணி போல் காக்கும் தேவா

அருகில் இருந்திடுவாய் - நான்

காலந்தோறும் உனது நிழலில் - வாழும் வரமருள்வாய் - 3

2. கடலைத் தேடி பாயும் நதியாய் உன்னைத் தேடிவந்தேன் - நீ

ஒளியைத் தேடி சாயும் மலராய் என்னைத் தேடிவந்தாய்

தாயைப் பிரிந்த சேயைப் போல தனித்து வாடிநின்றேன் - 2

நீ தாவி அணைத்து அன்பில் நனைத்து நண்பன் ஆகின்றாய்

சோர்ந்து வாடும் பொழுதில் எல்லாம் சொந்தம் தந்திடுவாய்

நான் சாய்ந்து கொள்ள ஏழை எனக்கு தோள்களாகிடுவாய் - 3


சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேச வா

உன் மொழி கேட்க வந்தேன் என்னோடு பேச வா - 2

1. என் உள்ளத்தில் கறையுண்டு குறைகள் பல உண்டு

உன் மொழியில் நிறையுண்டு இதய சுகமுண்டு - 2

இறைவனே நீரே எந்தன் நம்பிக்கை

என் வாழ்விலே என்றும் நீர் துணை

2. என் உள்ளத்தில் சுமையுண்டு விழிநீர் சோகமுண்டு

உன் வரவில் சுவையுண்டு இனிய வாழ்வுண்டு - 2 - இறைவனே...


தந்தையும் தாயுமான நல்லவரே இறைவா

பிள்ளைகள் கூடிவந்தோம்

எந்த இனம் என்ன குலம் என்று யாமறியோம் தந்தாய்

பிள்ளைகளாகி நின்றோம்

இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்

எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும் - 2

எங்களுக்கு தீமை செய்தோர்களை மன்னிக்கும் மனம் வளர்த்தோம்

அன்புடன் அரவணைத்தோம்

அனுதின உணவை எங்களுக்கு என்றும் உறுதி செய்தருளும்

வறுமை நீங்கச் செய்யும் இங்கு வாரும்...

உன்னதத்தில் உம் மகிமை ஆள்வது போல்

இங்கும் எங்குமே எங்கிலும் உம்மரசே

எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக

வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்

நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்

வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்

பிள்ளைகள் கூடி வந்தோம் தந்தையும் தாயுமான...

மனிதம் உயர்வு பெறும் உமது அரசு வரும்


தரிசனம் தரவேண்டும் இயேசய்யா - என் மேல்

கரிசனம் உள்ளவர் நீரே அய்யா - 2

பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்

தேவ துணையின்றி துன்பந்தான் மிஞ்சும் - 2

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்

காலம் காலமாக என்னைக் காக்கும் திருக்குமரா

1. நாளும் பொழுதும் உன் நினைவோடு நான்

வாழும் நல்வாழ்வு தரவேண்டுமே - 2

கப கக ரி ரிக ரிஸ ஸா பத பதஸ பதஸ கா

ரிக ரிரி ஸா தத தத பா கரி பக தப ஸத ரிஸ கரி ஸத கா

காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே - 2

தேனின் சுவையோடு ஆ... இயேசய்யா - 2

கீதம் பாடிடுமே ராக தாள பாவ கான - லயமுடனே - 2

2. வானும் விண்மீனும் உலகோடுதான்

யாவும் உன் சாயல் தெளிவாகுதே - 2 ஆ...

பாரில் எமக்காக தேவ சுதனாக - 2

நாத கனிவோடு ஆ... இயேசய்யா - 2

தாமே நாடினீரே பாப நேச தேவ பாலன் தயவுடனே - 2


திருக்கரத்தால் தாங்கி என்னை

திருச்சித்தம் போல் நடத்திடுமே

குயவன் கையில் களிமண் நான்

அனுதினமும் வனைந்திடுமே - 2

1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே

காரிருளில் நடக்கையிலே தீபமாக வழிநடத்தும் - 2

2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

ஆத்ம நண்பன் இயேசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம் - 2


துணையின்றி ஏங்கிடும் ஏழை நான் ஏழை நான் - நம்

இறைமகன் எனக்கினி தோழனே தோழனே

1. தீதானவை வழியானது என் பாவங்களும் மிகையானது - 2

என் பாவக் கறையை நீர் நீக்கி என் வாழ்வில் இன்பம் தந்தீரே

கண்பாரும் இனிமேல் துணையாக வாரும் என்னைத் தந்தேன் நானே

2. தேவாவியே துணையானது என் கோபங்களும் கரைந்தோடுது - 2

என்சோகக் குரலை நீர் கேட்டு பாவநோயின் துன்பம் தீர்த்தீரே

எந்நாளும் விலகி தனிவாழும் போதும் உந்தன் பிள்ளையானேன்


தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் ராகம் கோடி

நீயே என் வாழ்வின் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம்

தங்கும் எந்தன் உள்ளம் பொங்கும் அன்பின் வெள்ளம்

1. வானில் உலவும் நிலவும் இங்கு தேய்ந்து போகலாம்

தேனில் கலந்த மலரும் இங்கு காய்ந்து வீழலாம் - 2

உயிரில் கலந்த உணவும் இங்கு உடைந்து போகலாம்

விழியில் விழுந்த நினைவும் இங்கு வழிகள் மாறலாம் - 2

காலம் தேயலாம் உன் கருணை மாறுமோ

வாசம் போகலாம் உன் பாசம் தீருமோ இயேசுவே

2. சாய்ந்து கொள்ளத் தோள்கள் தினம் தந்த தெய்வமே

சோர்ந்து போகும் கால்கள் பலம் தந்த செல்வமே - 2

முள்ளில் விழுந்து தொழுதேன் நீ உறவில் தேடினாய்

அள்ளி அன்னையாய் எடுத்தாய் உன் சிறகில் மூடினாய் - 2

நதிகள் காயலாம் உன் நட்பு காயுமோ

நண்பர் பிரியலாம் உன் அன்பு மாறுமோ இயேசுவே


தேவகுமாரா கேட்கிறதா என் தியானகீதம் கேட்கிறதா

இமைகள் திறந்து உந்தன் கண்கள் எனை மட்டும் பார்க்கிறதா - 2

1. உன்னைக் காண விழி கொடுத்தாய்

உன்னைப் பாட மொழி கொடுத்தாய்

பயணம் போக வழி கொடுத்தாய்

பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்

உன்னை நினைத்து உருகி விட்டேன்

என்னை உனக்கே கொடுத்து விட்டேன் - 2

உனக்கே என்னைக் கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளம் வருகிறது கர்த்தர் பாதம் தொடுகிறது

என்னைப் போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உன்னை...


நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில்

கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன்

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே

உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே

இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம்

1. சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம்

இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் - 2

கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும்

மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால்

வானத்துப் பறவையைப் பார் விதைப்பதில்லை அறுப்பதில்லை

வயல்வெளி மலர்களைப் பார் உழைப்பதில்லை நூற்பதில்லை

இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே - 2 ஆ...

2. வருத்தும் சுமைகளெல்லாம் சுமந்திடக் காத்திருப்பான்

வாழ்வு தரும் வார்த்தைகளால் ஆறுதல் அளித்திடுவான் - 2

நல்லவர்க்கும் தீயவர்க்கும் அருள்மழை பொழிந்திடுவான்

வாழ்வின் வைகறையில் விடியலாய் எழுந்திடுவான்

வயல்வெளி மலர்களைப் போல் வாடிவிடும் வாழ்க்கை இது

நன்னெறி வாழ்க்கை ஒன்றே கூடிவரும் செல்வமது

இறைவன் உனைக் காப்பார் நீ கலங்காதே - 2 ஆ...


நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா

எந்நாளும் துணையாக கனிவோடு வர வேண்டும் - 2

1. வாழ்வும் நீ ஒளிதரும் தீபம் நீ ஜீவன் நீ கருணையின் தேவன் நீ - 2

தேவ தேவன் மானுவேலன் இராஜராஜன் இயேசுநாதர்

பாவி என்னை மீட்க வந்த அருள்மொழியே

பரம்பொருளே இறைமகனே

2. துன்பம் துயர் யாவும் உந்தன் அருளாலே

என்னை ஒருநாளும் கொஞ்சமும் அணுகாதே - 2

சோதனை வந்தாலும் - 2 ஆ... தாங்கிடும் உள்ளமே

அன்புடன் தேவனே வேண்டுமுன் தயவாலே தேவதேவன்....

3. சிலுவையில் இறைவா நீர் தந்த உயிராலே

புதிய மறுவாழ்வும் இனிதாய் அடைந்தேனே - 2

கிருபையின் இயேசுவே அருகினில் வரவேண்டும்

ஏழை என் வாழ்வில் தேவை உன் கருணை தேவதேவன்...


நீயாகவே இயேசுவே

உன் நினைவாகவே நான் வாழ்கிறேன்

நீயாக நான் மாற வரம் தாருமே

நீயின்றியே நானில்லையே

உன் நினைவாக நான் வாழ அருள் தாருமே

உன்னாலே நான் நிறைவாகுவேன்

இறைவா இறைவா நீயாகவே

இதயம் வாழும் உன் நினைவாகவே - 2

1. என் வாழ்வு மாந்தர்க்குப் பணியாகவே

உன்னாலே நான் உருவாகின்றேன்

நிதம் என்னை உலகிற்கு உப்பாக்கவே

உன்னாலே நான் வாழ்வாகின்றேன்

என் மனம் என்றும் உன்னில் இணையும்

என் உடல் என்றும் உன்னில் உறையும் - 2

நிதம் என்னைக் காக்கும் தேவன் நீயே இறைவா...

2. என் உள்ளம் நல்லோர்க்கு ஒளியாகவே

உன்னாலே நான் மெழுகாகின்றேன்

பணிவாழ்வு உலகோர்க்கு உரித்தாகவே

உன்னாலே நான் அழைக்கப்பட்டேன்

என் செயல் என்றும் உன்னைத் தொடரும்

என் உயிர் என்றும் உன்னில் உறையும் - 2

உருவாக்கி எனைக் காக்கும் இறைவன் நீயே நீயாக...


நீ உறவாடும் நேரமே என் உளமெங்கும் வசந்தமே

நீ எனதாகும் பொழுதில் - உன்

எண்ணங்கள் எனை மாற்றுமே உன்னருள் போதுமே

1. தனிமையில் கூட தனி சுகமே - என்

தலைவன் உமது உடனிருப்பால் - 2

சுமைகள் கூட சுகம் தருமே - உன்

இமைகள் என்னை அரவணைத்தால்

படைப்பினில் ஒளிர்வது உன் முகமே - இது

பரமனே உந்தன் அதிசயமே

2. இடர்கள் கூட இனிக்கின்றதே - என்

இனியவன் என்னில் இயங்குவதால் - 2

தடைகளில் மனம் மகிழ்கின்றதே - என்

தாயாய் உன் கரம் தேற்றுவதால்

நினைவிலும் நீங்காத உன் முகமே - இது

நேசமே உந்தன் அதிசயமே


நீயாக நான் மாறவேண்டும்

உனைப் போல உறவாட வேண்டும்

என் இயேசுவே உன் அன்பினிலே எந்நாளுமே நான் வாழணும்

உனில் நானும் உயிர் வாழ வேண்டும் - 2

1. ஏழை நானும் நீயின்றி வாழ்ந்தால் வாழ்வின் பொருளேது - 2

கணநேரம் உனை நானும் மறந்திடும் போது

கவலைகள் சூழ்கின்றது

ஏங்கும் என் இதயம் எழுந்தே நீ வாராய்

உயிரோடு கலந்திடுவாய் - 2

2. என்றும் உந்தன் அன்பொன்று போதும் எனக்கினி வாழ்வினிலே - 2

ஏழை என் நினைவினில் எழுந்திடும் எண்ணம்

எல்லாமும் நீயாகவே

சொல்லொன்று போதும் உன் சொல்லொன்று போதும்

என் ஆன்மா குணமடையும் - 2


நீயில்லாத வாழ்வே எனக்குள் வெறுமையிலும் வெறுமை - உன்

நினைவில்லாத பொழுதும் எனக்குள் தனிமையிலும் தனிமை

இறைவா தனிமையிலும் தனிமை

1. பனித்துளி பொழிந்தும் மழைத்துளி விழுந்தும்

நனையாத நிலமாகிறேன்

நிலவொளி விழுந்தும் கதிரொளி எழுந்தும்

முடிவில்லா இருளாகிறேன் - 2

அருட்கடலே உன் அருள்மழை படவேண்டும்

அறக்கடலே உன் ஒளியினைத் தொடவேண்டும்

காரிருள் சாய்ந்தோடிடும் எனில் கார்மழை பாய்ந்தோடிடும்

முடிவாகும் வெறுமை விடிவாகும் தனிமை - 2 இறைவா - 2

2. உயிரினில் கலந்தும் உறவினில் விரிந்தும் எரியாத திரியாகிறேன்

பாதைகள் தெரிந்தும் பயணங்கள் அறிந்தும்

புரியாத புதிராகிறேன் - 2

துயில்கொளவே உன் தோள்களில் தலைசாய்ப்பேன்

அழுதிடவே உன் மார்பினில் முகம் தேய்ப்பேன்

தாய்மடி நீயாகிறாய் எனைத் தாங்கிடும் நிலமாகிறாய்

சுகமாகும் இதயம் இதமாகும் உதயம் - 2 இறைவா - 2


நீலவானின் நிலவுப் போல் இனிமை தரும் தேவா

இதயத்தைத் திறந்தேன் நான் அன்பே நீ வருவாயா

வைகறை வசந்தமே என் வாழ்வின் உதயம் நீயாக வா

1. ஆலயம் நுழைந்ததும் அழுகை வருகுது

உன் அன்பின் நினைவினில் நெஞ்சம் மகிழுது

இரவிலும் பகலிலும் உனையே நினைக்கின்றேன்

இன்னிசை கீதத்தால் நிதமும் துதிக்கின்றேன்

என்னில் இனிமேல் வாழ்வது நானல்ல நீ இயேசுவே

அன்பாக வா அருளாக வா இதய வேந்தே வா

2. கேட்பதைக் கொடுத்திடும் இரக்கம் மிகுந்தவர்

நான் செல்லும் வழியெல்லாம் துணையாய் வருபவர்

உமக்காக வாழ்ந்திட உலகை மறந்தேனே

துன்பங்கள் துயரங்கள் ஏற்று மகிழ்ந்தேனே

எனக்கெல்லாம் நீ இயேசுவே நீயில்லையேல் நானில்லையே

உயிராக வா உறவாக வா என்னோடு வாழ வா


படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்

உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார் - 2

1. உள்ளம் என்றொரு கோவில் - அதில்

உயிராய் இருப்பான் இறைவன் - 2

அப்பம் என்றொரு உருவில் - அவன்

உணவாய் இருப்பான் உலகில்

2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்

இன்பம் நிறைப்பது இல்லை - 2

ஒளியைச் சிந்தி அருள்வாய் - பாவ

இருளில் வருவது இல்லை

3. தலைவன் என்றொரு உறவு - அவன்

பலியில் வந்ததின் நிறைவு - 2

இதயத் தாமரை கதவு - தினம்

திறந்தால் வருவது உணவு


பாரும் தேவனே ஒரு நிமிடம்

கேளும் நாதனே என் கானமே - 2

உன் உறவையே நான் தேடினேன்

உன் வருகைக்காய் தினம் வாடினேன்

1. உன் பார்வை எனக்கென்றும் சூர்யோதயம்

என் ஆசை மலர்விழிகள் அதில் விரியும்

உன் நினைவு எனக்கென்றும் சந்திரோதயம்

என் வாழ்வு அதில் மூழ்கி கவிபாடும்

நான் தேடினேன் உன் வாக்கையே

உன் இல்லமே என் சொந்தமே - 3

2. பாதங்கள் பயணத்தில் தடுமாறுதே

பாவங்கள் குறை தீர்த்து எனைத் தாங்குமே

பயணங்கள் வழிமாறி இருளானதே

சலனங்கள் தீர்த்தெந்தன் வழியாகுமே

நான் பார்க்கிறேன் ஒளிதீபமே

நான் போகிறேன் வழிகாட்டுவீர் - 3


பேசும் தெய்வமே பேசாத கல்லோ மரமோ அல்ல

பேசும் தெய்வமே என் தெய்வம் பேசும் தெய்வமே

1. நேற்றும் இன்றும் மாறாதவர் என்றும் வாழ்கிறவர் - 2

மாறாதவர் வாழ்கிறவர் மாறாதவர் என்றும் வாழ்கிறவர்

அவர்தான் இயேசு என் தெய்வம்

2. இதுதான் வழி என்று குரல் கொடுப்பார் கூடவே நடந்திடுவார் - 2

குரல் கொடுப்பார் நடந்திடுவார்

குரல் கொடுப்பார் என்னோடு நடந்திடுவார் அவர்தான்...


பொன்மாலை (காலை) நேரம் பூந்தென்றல் காற்றில்

என் ஜீவராகம் கரைந்தோடுதே

என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்

என் துன்பமேகம் கலைந்தோடுதே

உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்

உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1. நீ இல்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்

நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம் தான் - 2

காலந்தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே

சுமை சுமந்து சோர்ந்த வாழ்வைத் தேற்றும் இறைவனே

என் இயேசுவே அபயம் நீ தர வேண்டுமே

என் தெய்வமே அருகில் நீ வர வேண்டுமே

காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே ஆ... ம்...

2. ஒருகணம் என் அருகினில் நீ அமரும் போது ஒரு யுகம்

உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் - 2

முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப் பறிப்பதேன்

சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்வதேன்

என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை

என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை

அன்பின் இறையே இந்த இதயம் உன் அன்பைப் பாடுதே ஆ... ம்...


மகத்துவம் நான் கண்டேன் என் இறையவனே

உன் மகத்துவம் நான் கண்டேன் - நீர்

மனிதனில் காட்டிய அளவில்லா அன்பினில்

மகத்துவம் நான் கண்டேன் - 2

1. உம் புகழ் சாற்றிடும் படைப்பினிலே மகத்துவம்...

படைப்பினில் விந்தையாம் கோள்களிலே மகத்துவம்...

கோள்களில் சிறந்தது இப்புவியினில் மகத்துவம்...

புவியினுள் ஓடுகின்ற நீரினில் மகத்துவம்...

மனிதனில் நீர் தந்த சாயலில்

மனிதனுள் நீர் வாழும் நிலையில் மகத்துவம்...

2. விண் இன்று மண்ணகம் வந்ததிலே மகத்துவம்...

மரியாவின் உதரத்தில் வந்ததிலே மகத்துவம்...

மரணத்தை வென்ற உம் உயிர்ப்பிலே மகத்துவம்...

வெண்ணிற அப்பத்தின் வடிவிலே மகத்துவம்...


மகிமையின் ராஜனே மகத்துவ தேவனே

உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை - 2

1. இறையே எம் அரசே இயேசு பெருமானே

எங்கள் குலகுருவே உமக்கே ஆராதனை

2. சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி

வானகம் திறந்தோனே உமக்கே ஆராதனை

3. ஜெயம் பேரிகை முழங்க ஜெகதலத்தோர் களிக்க

சிருஷ்டிகளெல்லாம் மகிழ உமக்கே ஆராதனை


மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ

இசைக் குழலின் ஒளியில் மயங்குவோரே பேச வருவீரோ - 2

மானைப் போல தவித்து நிற்கும் இதயம் பாரீரோ - 2

தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ

1. குழந்தை போல பேச எனக்கு இதயம் இல்லையே

மழலை சொல்லும் நாட்களாக மறந்து போனதே - 2

இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ

வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே

2. பாவி என்னை பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர்

மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் - 2

தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன்

மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவப் பொறுத்தல் அளிப்பீரோ


வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே

நதிமீது அலைந்தாடும் அகல் போலவே

கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே

அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி

துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி

எனைத் தாங்கும் என் தெய்வமே

என் நிழலாக எழும் தெய்வமே

1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்

உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2

நீரின்றியே மண்ணில் வளமில்லையே

நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே

எனை தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே

நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது

துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது

பலனாக கை மீது வா இங்கு புலனாகும் இறையாக வா

2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே

என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2

உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ

உன் பார்வைகள் என் வழியாகுமோ

இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா

ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே

விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே

நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா


ராஜாதி ராஜனே தேவாதி தேவனே

விண்ணோர் வணங்கிடும் விமல ராஜனே

1. வானின்று இறங்கிய உணவு நானென்றீர்

ஆவலாய் உண்பவர் ஆன்ம வாழ்வைக் கண்டிடுவீர் - 2

தேவாதி தேவனே ராஜாதி ராஜனே

போற்றித் துதித்துப் பாடிடுவோம் - 2

2. அன்பினால் உம்மையே உணவாகத் தந்தீர்

அன்புடன் உலகினில் வாழ்வும் வழியும் காட்டினீர் - 2 தேவாதி...

3. என்னில் நீ நிலைத்தாலே வாழ்வு உண்டென்றீர்

உம்மில் நான் நிலைக்கவே விரைந்து எம்மில் வந்திடுவீர் - 2 தேவாதி...


Contact Form

Name

Email *

Message *